மேலும் ஒரு மாநிலத்தில் ஆட்சியை இழந்தது, காங்கிரஸ்: தொடர் வீழ்ச்சியால் கட்சியினர் கலக்கம்


மேலும் ஒரு மாநிலத்தில் ஆட்சியை இழந்தது, காங்கிரஸ்: தொடர் வீழ்ச்சியால் கட்சியினர் கலக்கம்
x

கோப்புப்படம்

மராட்டியத்தில் புதிய அரசு அமைந்ததன் மூலம் மேலும் ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த ஒரு சில மாநிலங்களில் மராட்டியமும் ஒன்றாக இருந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரசுடன், காங்கிரசும் இணைந்திருந்தது. ஆனால் இந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்து நேற்று புதிய அரசு அமைந்து உள்ளது. பா.ஜனதா ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.வான ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆகி உள்ளார்.

மராட்டியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததன் மூலம், நாட்டில் மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு உள்ளது. தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்காரில் அந்த கட்சி தனித்தும், ஜார்கண்டில் கூட்டணி ஆட்சியும் என 3 மாநிலங்களில் மட்டுமே அந்த கட்சி ஆட்சியில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் சட்டசபை தேர்தல்களில் கட்சியின் வெற்றி சதவீதம் வேகமாக சரிந்து வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ஒரு மாநிலத்திலும் அந்த கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இது ஒருபுறம் இருக்க, கட்சியின் முன்னணி தலைவர்கள் அடுத்தடுத்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து வருகின்றனர்.

இவ்வாறு கட்சியின் அதிகாரம் கைவிட்டுப்போவதும், முன்னணி தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதும் கட்சித்தலைமைக்கு மட்டுமின்றி தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் மிகையல்ல.


Next Story