கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியுடன் தகராறு: மாயமான வாலிபர் தூக்கில் பிணமாக மீட்பு - கொலையா? போலீஸ் விசாரணை
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாயமான வாலிபர் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஞானபாரதி:
கள்ளத்தொடர்பு
பெங்களூரு கும்பலகோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இதற்கிடையே இவருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் நாகேசின் மனைவிக்கு தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
ஆனாலும் நாகேஷ் கள்ளக்காதலை கைவிடவில்லை. இந்த நிலையில் நாகேஷ் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததை அவரது மனைவி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் நாகேசுடன் வாக்குவாதம் செய்தார். மேலும் கள்ளக்காதலை கைவிட வலியுறுத்தினார். அப்போது மனைவியிடம் தகராறு செய்துவிட்டு கோபித்து கொண்டு, நாகேஷ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அவர் வீட்டிற்கு திரும்பவில்லை.
தூக்கில் தொங்கினார்
இதுகுறித்து அவரது மனைவி கும்பலகோடு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் விசுவேஸ்வரய்யா லே-அவுட் பகுதியில் மரத்தில் நாகேஷ் தூக்கில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஞானபாரதி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தூக்கில் தொங்கிய நாகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கும்பலகோடு பகுதியில் மாயமான நாகேஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஞானபாரதி போலீசார், கும்பலகோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக நாகேசின் மனைவியையும், கள்ளக்காதலியையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.