பெங்களூருவில் உள்ள நம்ம கிளினிக்குகளை காலை 7 மணிக்கே திறக்க முடிவு
பெங்களூருவில் உள்ள நம்ம கிளினிக்குகளை காலை 7 மணிக்கே திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில் பெங்களூருவில் உள்ள 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த மாதம் (பிப்ரவரி) பெங்களூருவில் முதற்கட்டமாக 108 நம்ம கிளினிக்குகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த கிளினிக்குகள் காலை 9 மணியில் இருந்து மதியம் 1.30 மணிவரையும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரையும் திறக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலையில் 9 மணிக்கு தான் கிளினிக்குகள் திறப்பதால், அதற்கு முன்பாகவே கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று விடுகின்றனர்.
இதன் காரணமாக கூலித் தொழிலாளர்களால் நம்ம கிளினிக்குகளுக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி மாநகராட்சியின் சுகாதாரத்துறையின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள 108 நம்ம கிளினிக்குகளையும் காலையில் 7 மணிக்கே திறப்பதற்கு மாநகராட்சியின் சுகாதாரத்துறை முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து, காலையில் 7 மணிக்கு கிளினிக்குகளை திறக்க அனுமதி வழங்கும்படி அரசிடம் கேட்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இந்த தகவலை மாநகராட்சியின் சுகாதாரத்துறை கமிஷனர் பாலசுந்தர் தெரிவித்துள்ளார்.