தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் விழா; தமிழக பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி


தேசிய படைப்பாளிகள்  விருது வழங்கும் விழா; தமிழக பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 8 March 2024 3:00 PM IST (Updated: 8 March 2024 3:02 PM IST)
t-max-icont-min-icon

சிறந்த கதை சொல்பவர் பிரிவில் கீர்த்திகா கோவிந்தசாமி, என்பவருக்கு விருது கிடைத்தது. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

புதுடெல்லி,

புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முதல்முறையாக தேசிய படைப்பாளிகளுக்கான விருதுகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார்.சிறந்த கதை சொல்பவர், பிரபல படைப்பாளர், பசுமை சாம்பியன், சமூக மாற்றத்துக்கான சிறந்த படைப்பாளர், மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வேளாண் படைப்பாளர், கலாச்சார தூதர், சிறந்த பயண படைப்பாளர், தூய்மை தூதர், புதிய இந்தியா சாம்பியன், தொழில்நுட்ப படைப்பாளர், பாரம்பரிய பேஷன், மிக படைப்பாற்றல்மிக்க படைப்பாளர் (ஆண் மற்றும் பெண்) உணவு பிரிவில் சிறந்த படைப்பாளர், கல்வியில் சிறந்த படைப்பாளர் மற்றும் சர்வதேச படைப்பாளர் உள்ளிட்ட 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகள் தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், "கதைசொல்லல், சமூக மாற்றத்தை ஆதரிப்பது, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி மற்றும் கேமிங் உள்ளிட்ட தளங்களில் சிறந்து விளங்குவதையும், தாக்கத்தை அங்கீகரிக்கும் முயற்சியாகவும் இந்த விருது உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஜெயா கிஷோரி, அமெரிக்க யூடியூபர் ட்ரூ ஹிக்ஸ் உள்பட சமூக வலைதளங்களில் செல்வாக்குடன் திகழும் பலருக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார்.

சிறந்த கதை சொல்பவர் பிரிவில் விருது வாங்கிய கீர்த்திகா கோவிந்தசாமி, தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். அவர், வரலாற்று தகவல்களை யூடியூப் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து பதிவேற்றி வந்தார். விருது பெற வந்த தமிழகத்தை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி, பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கினார். பதிலுக்கு பிரதமர் மோடியும் அப்பெண்ணின் காலை மூன்று முறைத் தொட்டு வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story