டெல்லி வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.3 உயர்வு


டெல்லி வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.3 உயர்வு
x
தினத்தந்தி 8 Oct 2022 6:59 AM IST (Updated: 8 Oct 2022 7:32 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி ரூ.78.61 ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது.


புதுடெல்லி,



டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு எடுத்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் சூழலில், சுற்றுப்புற சூழலில் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதேபோன்று, அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் அவற்றுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு நிரப்பிய வாகனங்களின் பயன்பாடும் டெல்லியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம் (ஐ.ஜி.எல்.), கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பயன்படுத்த கூடிய, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி அறிவித்தது. இதன்படி, அதன் விலை இனி டெல்லியில் ரூ.78.61 ஆக விற்கப்படும்.

இந்த விலை உயர்வானது சில நகரங்களில் கிலோ ஒன்றுக்கு ரூ.4 மற்றும் ரூ.5 என்றும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத்தில் ரூ.81.17 ஆகவும், குருகிராமில் ரூ.86.94 ஆகவும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதேபோன்று சி.என்.ஜி. சில்லரை விலையில் கிலோ ஒன்றுக்கு முசாபர்நகர், மீரட் மற்றும் சாம்லியில் ரூ.85.84 ஆகவும், ரேவாரியில் ரூ.89.07, கர்னால் மற்றும் கைத்தல் நகரங்களில் ரூ.87.27, கான்பூர், ஹமீர்பூர் மற்றும் பதேபூரில் ரூ.89.81, அஜ்மீர், பாலி மற்றும் ராஜ்சமந்தில் ரூ.85.88 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வானது இன்று காலை 6 மணியில் இருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story