மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள், மாவட்ட எஸ்.பி.க்களை கைது செய்ய வாரண்ட் பிறப்பிப்பு - காரணம் என்ன?
மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள், மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்களை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி,
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் இடாக்புரி தாலுகாவை சேர்ந்த பழங்குடியின சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு தொடர்பான விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின சிறுமிகள் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
ஒரு ஆடு மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு 30 சிறுமிகள் விற்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய பழங்குடியின ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்பதை ஆணையம் கண்டறிந்தது.
இதனை தொடர்ந்து நாசிக் மாவட்ட மாஜிஸ்திரேட்டு கங்காதரன், அகமத்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட்டு ராஜேந்திர போசேல், அகமத்நகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராகேஷ், நாசிக் ரூரல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷஜாஜி உமெப் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இம்மாத தொடக்கத்தில் தேசிய பழங்குடியின ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆணையம் உத்தரவிட்டும் வழக்கு விசாரணை தொடர்பாக யாரும் ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகாத மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள், மாவட்ட எஸ்.பி.க்களை கைது செய்து வரும் 1-ம் தேதி ஆணையம் முன் ஆஜர்படுத்த தேசிய பழங்குடியின ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.