நுபுர் சர்மா பற்றி சர்ச்சை டுவீட்; அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் போலீசில் புகார்!


நுபுர் சர்மா பற்றி சர்ச்சை டுவீட்; அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் போலீசில் புகார்!
x
தினத்தந்தி 4 July 2022 3:18 PM IST (Updated: 4 July 2022 3:20 PM IST)
t-max-icont-min-icon

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தேசிய மகளிர் ஆணையம், அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக பல மாநிலங்களில் நுபர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்படி பல்வேறு மாநிலங்களிலும் பதிவு செய்யப்பட்ட எல்லா வழக்குகளையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரிய நுபுர் ஷர்மா தாக்கல் செய்த மனு ஜுலை 1 அன்று, விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு "அவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்தது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பற்றி கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டரில் சில கருத்துக்களை பதிவிட்டார்.

அவர் கூறியதாவது, "நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைத்ததற்காக, முகம் மட்டுமல்ல, உடலும் மன்னிப்பு கேட்க வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

அவர் நுபுர் சர்மாவை முகம் எனவும், பின்புலத்தில் பா.ஜ.க உள்ளதாக அதனை உடல் எனவும் மறைமுகமாக குறிப்பிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த டுவிட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தேசிய மகளிர் ஆணையம், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் நியாயமான மற்றும் காலக்கெடுவுக்கான விசாரணையை கோரியுள்ளது. அகிலேஷ் யாதவ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை 3 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா ஷர்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின் கீழ் அகிலேஷ் யாதவ் மீது அவசர நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தன்னை ஒரு கட்சியின் தலைவர் என்று சொல்லிக்கொண்ட இவரைப் பாருங்கள். அவர் நுபுர் சர்மாவை தாக்க மக்களை தூண்டுகிறார். அவர் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க மாண்புமிகு சுப்ரீம் கோர்ட்டை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.


Next Story