குஜராத்: கனமழை காரணமாக ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவின் பயணம் ஒத்திவைப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவின் குஜராத் பயணம் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இதையடுத்து, நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில், ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று (ஜூலை-13) குஜராத் மாநிலத்திற்கு சென்று ஆதரவு திரட்ட இருந்தார். அங்கு பழங்குடியின சமூகத்தினர் அதிகம் வசிக்கும் நர்மதா மாவட்டத்திற்கும் செல்ல திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திரவுபதி முர்முவின் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில பாஜக செய்தி தொடர்பாளர் ஜூபின் அஷாரா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா, கடந்த 8-ந் தேதி குஜராத் சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டியது குறிப்பிடத்தக்கது.