பெல்தங்கடி அருகே மர்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி
பெல்தங்கடி அருகே மர்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா குண்டூரி அருகே உள்ள அசோக்னிவாசா பகுதியை சேர்ந்தவர் அசோக் பூஜாரி. அவரது மனைவி பிரதிமா. இவர்களது மகள் அங்கிதா(வயது 17). இவர் வேனூர் அரசு பல்கலைக்கழகத்தில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவரது பெற்ேறார் அவரை பெல்தங்கடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மாணவி அங்கிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனாலும் கூட அவருக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து கடந்த 22-ந்தேதி அங்கிதாவை டாக்டர்கள் மங்களூருவில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அங்கிதா நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி பாிதாபமாக உயிரிழந்தார். மாணவி அங்கிதா உயிரிழந்த சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.