தரிகெரே அருகே பா.ஜனதாவினர் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல்


தரிகெரே அருகே  பா.ஜனதாவினர்  மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல்
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தரிகெரே அருகே லக்குவல்லியில் கிராம பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர் தேர்தலில் ஆதரவு அளிக்க மறுத்த சுயேட்சை, பா.ஜனதா உறுப்பினர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

சிக்கமகளூரு-

தரிகெரே அருகே லக்குவல்லியில் கிராம பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர் தேர்தலில் ஆதரவு அளிக்க மறுத்த சுயேட்சை, பா.ஜனதா உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்து தேர்தல்

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா லக்குவல்லி கிராம பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை தலைவராகவும், துணை தலைவராகவும் தேர்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு சுயேட்சைகள் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த 8 உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காங்கிரஸ் தரப்பில் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் லக்குவல்லி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு சுயேட்சை மற்றும் பா.ஜனதா உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல்

ஆனால் இதனை சுயேட்சை மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் ஏற்று கொள்ளவில்லை. எங்களுக்கும் பதவி ஆசை இருக்கிறது. துணை தலைவர் பதவி பா.ஜனதாவிற்கு வழங்கவேண்டும் என்று கூறினர். இதனால் விருந்து நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த சலசலப்பு வாக்குவாதமாக மாறியது. அப்போது கோபமடைந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், சுயேட்சை மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த 8 உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதில் 8 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட பா.ஜனதா கட்சியினர், தரிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த தாக்குதல் சம்பவம் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து சுயேச்சை மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் லக்குவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.


Next Story