நீட் முறைகேடு விவகாரம்; சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
நீட் முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
2024-25ம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு 67 பேர் நீட் தேர்வில் 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரே கல்வி மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
இதனை கண்டித்து மாணவர்கள் போராட்டதில் ஈடுபட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனிடையே நீட் முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஆகியவை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்களை நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி சந்தீப் மேஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு தரப்பில் அடுத்த விசாரணையின்போது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு இந்த மனுக்களை, ஏற்கனவே ஜூலை 8-ந்தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட நீட் முறைகேடு விவகாரம் தொடர்பான மனுக்களோடு இணைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.