நாட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது... 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கடுமையாக போராடவேண்டும் - சசிதரூர்
2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நாம் கடுமையாக போராடவேண்டும் என்று சசிதரூர் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் இரு வேட்பாளர்களும் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் சசிதரூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் யாராயினும் நேரு-காந்தி குடும்பத்தினரை கட்சியில் இருந்து விலக்கி வைப்பது முட்டாள்தனமானது. நேரு-காந்தி குடும்பம் கட்சியில் இருந்து விலக்கிவைப்பதை நான் கூட விரும்பமாட்டேன்.
தேர்தலில் போட்டியிடுவது என நான் முடிவெடுத்தப்பின் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை நான் தனித்தனியே சந்தித்தேன். காங்கிரஸ் தலைவர் தேர்தல் பாரபட்சமின்றி நடைபெறவேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரியாக உள்ள மதுசூதன் மிஸ்டிரியும் அதே கருத்தில் உள்ளார்.
நாட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நாம் கடுமையாக போராட வேண்டும்' என்றார்.