கட்சியின் பெரிய தலைவர்களின் ஆதரவை எதிர்பார்க்கவில்லை - சசி தரூர்


கட்சியின் பெரிய தலைவர்களின் ஆதரவை எதிர்பார்க்கவில்லை - சசி தரூர்
x

காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரிய தலைவர்களின ஆதரவை எதிர்பார்க்கவில்லை என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தோடு சசி தரூர் மற்றும் கார்கே தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை சந்தித்து ஆதரவுகோரி வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் வந்துள்ள சசி தரூர் தலைவர் தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக சசி தரூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சசி தரூர், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கி எனக்கு இதுவரை ஆதரவளித்தவர்களுக்கு நான் துரோகம் செய்யப்போவதில்லை.

கட்சியின் பெரிய தலைவர்களின் ஆதரவை நான் எதிர்பார்க்கவில்லை. இதை இப்போதும் எதிர்பார்த்ததில்லை. நாக்பூர், வர்தா, ஐதராபாத்தில் கட்சி நிர்வாகிகளை நான் சந்தித்தேன். அவர்கள் தான் என்னை தலைவர் தேர்தலில் போட்டியிட கூறினார்கள். இது இருந்து நான் பின்வாங்கப்போவதில்லை.

நான் பின்வாங்கமாட்டேன் என்று அவர்களிடம் வாக்குறுதி கொடுத்துள்ளேன். அவர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை தான் என்னை முன்னோக்கி கொண்டு செல்கிறது. என்னை ஆதரிக்கும் பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியின் இளைய தலைமுறை தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆவர்' என்றார்.


Next Story