ரூ.384 கோடியில் சிவமொக்காவில் புதிய விமான நிலையம்; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்


ரூ.384 கோடியில் சிவமொக்காவில் புதிய விமான நிலையம்; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
x

ரூ.384 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிவமொக்கா விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று(திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு:

கர்நாடகம் வருகை

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா உள்பட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். பா.ஜனதா மேலிட தலைவர்கள் அதாவது பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து கட்சியின் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுவிட்டு செல்கிறார்கள். அமித்ஷா கர்நாடகத்தில் தொடர்ந்து 3 மாதங்கள் தங்கி தேர்தல் பணியாற்ற திட்டமிட்டுள்ளார்.

இதனால் கர்நாடக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 6-ந் தேதி கர்நாடகம் வருகை தந்து, 50 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கினார். அதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இந்த மாதத்தில் 3-வது முறையாக மோடி கர்நாடகம் வருகிறார். கடந்த 2 மாதங்களில் அவர் 5-வது முறையாக கர்நாடகம் வருகிறார். அவர் இன்று(திங்கட்கிழமை) கர்நாடகம் வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இரவில் விமானங்கள்

பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சிவமொக்காவுக்கு காலை 11.15 மணிக்கு வருகை தருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். ரூ.384 கோடி செலவில் 775 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 3,200 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்தில் இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதி இடம் பெற்றுள்ளது. இது கர்நாடகத்தில், பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையம் ஆகும். எடியூரப்பாவின் 80-வது பிறந்த நாளில் சிவமொக்கா விமான நிலையம் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த விமான நிலையம் தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து அவர் ரூ.990 கோடியில் சிவமொக்கா-சிகாரிப்புரா-ராணிபென்னூர் புதிய ரெயில் வழித்தடத்திற்கும், ரூ.100 கோடியில் கோட்டேகன்குரு ரெயில் பெட்டி பணிமனை மையத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பைந்தூர்-ராணிபென்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் சிகாரிப்புராவில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் உள்பட பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார். தீர்த்தஹள்ளி தாலுகா பாரதிபுராவில் புதிய பாலம் கட்டும் பணியும் தொடங்கப்படுகிறது.

குடிநீர் இணைப்பு

ரூ.950 கோடியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 127 கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் ரூ.860 கோடியில் மேலும் மூன்று திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இவற்றின் மூலம் 4.4 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.895 கோடியில் சிவமொக்காவில் சீர்மிகு நகர் திட்டத்தில் 4 திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்படுகின்றன.

அதன் பிறகு அவர் பகல் 2.15 மணிக்கு பெலகாவிக்கு செல்கிறார். அங்கு ரூ.2,253 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வை்கிறார். அதாவது 'கிசான் சம்மான்' திட்டத்தின் கீழ் 8 கோடி விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதி உதவியை விடுவிக்கிறார். அங்கு ரூ.190 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள பெலகாவி ரெயில் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். லொண்டா-பெலகாவி இடையே இரட்டை ரெயில் பாதையை தொடங்கி வைக்கிறார். அது ரூ.930 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் பிரதமர் மோடி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 'ரோடு ஷோ' பேரணி நடத்தி ஆதரவு திரட்டுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சிவமொக்கா, பெலகாவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு படையினர் தீவிரமான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story