மிரட்டி பணம் பறிக்க முயற்சி; தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் 5 பேர் கைது
மிரட்டி பணம் பறிக்க முயன்ற அஜய் கந்தா, பிரோஷ் சம்தா, சமீர்கான், பப்பா பட்டான், அம்ஜத் ரெட்கர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் தலைமையில் அவரது கூட்டாளிகள் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களை மிரட்டி பணம்பறிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலையில் ஈடுபட்டு வந்த சோட்டாசகீலின் மைத்துனர் சலீம் குரோஷி மற்றும் தொழிலதிபர் ரியாஸ் பாட்டி ஆகியோரை போலீசார் கடந்த மாதம் கைது செய்து இருந்தனர். இவர்கள் மீது மோக்கா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் அவர்களுடன் தொடர்புடைய மேலும் 5 பேரின் அடையாளம் தெரியவந்தது. . இதன்பேரில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற அஜய் கந்தா, பிரோஷ் சம்தா, சமீர்கான், பப்பா பட்டான், அம்ஜத் ரெட்கர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். வெர்சோவாவை சேர்ந்த தொழிலதிபரை மிரட்டி ரு.30 லட்சம் கார் மற்றும் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கேட்டு மிரட்டி உள்ளதாக ஏற்கனவே 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.