குஜராத்தில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள்: பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்..? - கார்கே கேள்வி


குஜராத்தில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள்: பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்..? - கார்கே கேள்வி
x
தினத்தந்தி 1 March 2024 10:27 PM IST (Updated: 1 March 2024 10:28 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் தற்போது அதிகரித்துள்ள தற்கொலை விகிதம் கவலை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டுக்கு ஏற்கெனவே பல அநீதிகளை இழைத்துள்ள பா.ஜனதாவின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் தவறான நிர்வாகத்துக்கு இந்த தற்கொலை சம்பவங்கள் மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குஜராத்தில் கடந்த 3 நிதி ஆண்டுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் சுமார் 500 பேர் மாணவர்கள். குஜராத் சட்டப்பேரவையில் வழங்கப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரம் இது.

இந்த செய்தி மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, மிகப் பெரிய கவலையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. விரக்தி, நம்பிக்கையின்மை மற்றும் நிவர்த்தி செய்யப்படாத குறைகளுடன் மக்கள் போராடுவதையே இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முன்னேற்றம், செழிப்பு என்று பெருமை பேசும் ஒரு மாநிலத்தில், குடிமக்கள் பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மனசாட்சிக்கு விரோதமானது. நாட்டுக்கு ஏற்கெனவே பல அநீதிகளை இழைத்துள்ள பா.ஜனதாவின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் தவறான நிர்வாகத்துக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு.

தனது சொந்த மாநிலத்தில் நடந்த இந்த மிகத் துயரமான மனிதப் பேரவலம் குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது. முதல்-மந்திரி பூபேந்திர படேல் இந்த நெருக்கடியை ஒப்புக்கொண்டது கண்டனத்திற்குரியது என்றாலும், ஆட்சியின் அடிப்படைத் தோல்வியை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அகமதாபாத் (3,280), சூரத் (2,862), மற்றும் ராஜ்கோட் (1,287) ஆகிய இடங்களில் இருந்து அதிகபட்ச தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு போதுமான ஆதரவையும் ஆதாரங்களையும் வழங்க அரசாங்கம் தவறிவிட்டது. மாநிலத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த தற்கொலை பிரச்சினைக்குத் உடனடியாக அரசு தீர்வு காண வேண்டும்" என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.


Next Story