ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொல்ல முயற்சி: வாலிபர் கைது


ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொல்ல முயற்சி: வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 May 2022 3:41 AM IST (Updated: 20 May 2022 11:38 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு: மங்களூருவில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலியல் தொல்லை

தட்சிண கன்னடா மாவட்டம் அலயங்கடி பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். மேலும் அவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், பண்ட்வாலை சேர்ந்த சிவராஜ் குலால் (வயது 28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண், சிவராஜிடன் நட்பாக பழகி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சிவராஜ், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் மனரீதியாகவும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அவரை தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கும்படி சிவராஜ் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்துவிட்டார்.

கழுத்தை அறுத்தார்

இதனால் சிவராஜ், அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு சிவராஜ் சென்றார். அப்போதும் தனது ஆசைக்கு இணங்கும்படி சிவராஜ், அந்த பெண்ணை வலியுறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில், 'லிப்ட்'டில் அந்த பெண் சென்றுள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற சிவராஜ், லிப்ட்டில் வைத்து தான் வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண்ணை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாலிபர் கைது

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மங்களூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண்ணை சிவராஜ் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிவராஜை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story