'நியூஸ்கிளிக்' செய்தி நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது


நியூஸ்கிளிக் செய்தி நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது
x
தினத்தந்தி 3 Oct 2023 11:17 PM IST (Updated: 3 Oct 2023 11:33 PM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் 'நியூஸ்கிளிக்' செய்தி நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லியில் இணையதள செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக் அலுவலகத்தில் டெல்லி காவல்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். அலுவலகம் மட்டுமின்றி, அதில் பணிபுரியும் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் டெல்லி, நொய்டா, காசியாபாத் பகுதிகளில் சோதனை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரின் மகன் 'நியூஸ் கிளிக்' ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதுடன் யெச்சூரியின் வீட்டில் தங்கியுள்ளதால் இந்த சோதனை நடைபெற்றது.

சோதனையில் நிறுவன ஊழியர்களின் லேப்டாப், மொபைல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடந்த 3 ஆண்டுகளில் 38.05 கோடி பணம் பெற்ற குற்றச்சாட்டில் ஊடக நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அதனடிப்படையிலேயே டெல்லி போலீசார் சோதனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த சூழலில் சீனாவுக்கு ஆதரவாக செய்தி பதிவிட பணம் பெற்றதாகக் கூறி, இன்று மாலை டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது. சட்டவிரோத பணபரிமாற்றச் சட்டத்தின் கீழ் ஊடக நிறுவனம் மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் 'நியூஸ் கிளிக்' நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story