"நிகான் கேமிராவில் கெனான் லென்ஸ் கவர்"- பிரதமர் மோடியை கிண்டல் செய்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி- உண்மை என்ன?
எம்பி ஜவஹர் சிர்கார் பகிர்ந்து இருந்த புகைப்படத்தில் நிகான் கேமராவில் கேனான் லென்ஸ் கவர் இருப்பது தெளிவாக தெரிந்தது.
சென்னை,
நமீபியா நாட்டில் இருந்து வந்த 8 சீட்டா ரக சிறுத்தைகளை மத்தியப் பிரதேசன் குணோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். இதை தொடர்ந்து சிறுத்தைகளை பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜவஹர் சிர்கார் பிரதமர் மோடி புகைப்படம் எடுக்கும் படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, " அனைத்து புள்ளிவிவரங்களையும் மூடி வைத்திருப்பது இருக்கட்டும் ஆனால் கேமிராவிலும் லென்ஸ் கவர் மூடி வைக்கப்பட்டிருப்பதுதான் தொலைநோக்கு பார்வை" என கிண்டல் செய்து இருந்தார். அவர் பகிர்ந்து இருந்த புகைப்படத்தில் பிரதமர் புகைப்படம் எடுக்கும்போது கேமராவின் லென்ஸ் கவர் மூடி வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து எம்பி ஜவஹர் சிர்கார் பகிர்ந்து இருந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது. இதனையடுத்து அக்கட்சியினர் பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து விமர்சிக்கத் தொடங்கினர். மேலும் சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் பேசுபொருளாக மாறியது.
பின்னர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இப்புகைப்படம் குறித்த உண்மைத் தன்மை ஆராயப்பட்டது. இதற்கு பாஜக தலைவர்களில் ஒருவரான சுகந்தா மஜும்தார் முற்றுப்புள்ளி வைத்தார்.
இது குறித்து அவர் பதிவிட்ட டுவிட்டில், " திரிணாமுல் காங்கிரஸ் நிகான் கேமராவில் கேனான் மூடியுடன் "எடிட்" செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். போலி பிரசாரத்தை பரப்பும் முயற்சி மோசமான முயற்சி. குறைந்தபட்ச பொது அறிவு கொண்டவர்களை எம்பியாக நியமியுங்கள் மம்தா பானர்ஜி" என தெரிவித்து உள்ளார்.
எம்பி ஜவஹர் சிர்கார் பகிர்ந்து இருந்த புகைப்படத்தில் கேமரா லென்ஸ் மூடி வைக்கப்பட்டு இருந்தது மட்டுமின்றி நிகான் கேமராவில் கேனான் மூடி இருப்பது தெளிவாக தெரிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஜவகர் சிர்கார் பிரதமர் குறித்த அந்த டுவீட்டை நீக்கினார். பின்னர் எடிட் செய்யப்பட்ட அந்த புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியின் டாமன் மற்றும் டையூ பிரிவு மற்றும் பல காங்கிரஸ் தலைவர்களின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று பிரதமர் மோடி பயன்படுத்திய கேமராவில் கேனான் லென்ஸ் கவர் இல்லை. பிடிஐ செய்தி நிறுவனம் எடுத்த கீழே பகிரப்பட்டுள்ள புகைப்படத்தில் அது தெளிவாக விளங்குகிறது. இதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜவஹர் சிர்கார் பகிர்ந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது.