சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை
சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
கோலார் தங்கவயல்:-
பஞ்சரத்னா ரத யாத்திரை
சிக்பள்ளாப்பூர் மாட்டத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் நடந்து வந்த பஞ்சரத்னா யாத்திரையை முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிறைவு செய்தார். அப்போது நிருபர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது:-
கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் பஞ்ரத்னா ரத யாத்திரை நடத்தினோம். இந்த ரத யாத்திரை எங்களுக்கு திருப்தி அளித்துள்ளது. செல்லும் இடம் எல்லாம் மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வரவேற்பை வைத்து பார்க்கும்போது, கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கூட்டணி இல்லை
கர்நாடகத்தில் தேசிய கட்சிகளை ஒழிக்கவேண்டும் என்பதே ஜனதா தளம்(எஸ்) கட்சியின் குறிக்கோள். தமிழத்தை போன்று கர்நாடகத்தில் மாநில கட்சி ஆட்சி அமைக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு தேவையான நிதிகளை கேட்டு வாங்க முடியும். கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. தனித்தே தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது. தனித்தே போட்டியிடுகிறோம். ஏனென்றால் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்கள் பட்ட கஷ்டம் போதும். இனி இதுபோன்ற துன்பங்களை அவர்கள் அனுபவிக்க நான் இடம் அளிக்கமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.