இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; புதிய வகை வைரஸ் மாறுபாடு இல்லை - தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநர்
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆனால் புதிய மாறுபாடு எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
புதுடெல்லி,
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (என்சிடிசி) இயக்குநர் டாக்டர் சுஜீத் சிங் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆனால் புதிய மாறுபாடு எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
புதிய வகை வைரஸ் மாறுபாடு எதுவும் கண்டறியப் படாததால், நோயின் தீவிரம் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன.
இதற்காக, தீவிர கண்காணிப்பு உத்தி பின்பற்றப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 396 தீவிர கண்காணிப்பு மையங்கள், மரபணு வரிசைப்படுத்தலுக்கான மாதிரிகளை அனுப்பி வருகின்றன.
ஒமைக்ரான் பிஏ.2 வகை வைரஸ் தான் இப்போது டெல்டா மற்றும் பிற மாறுபாடுகளை காட்டிலும் பெரும்பான்மையாக பாதிக்கின்றன.
மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எந்த வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் அவை எவ்வாறு பாதிப்பை தூண்டுகின்றன என்ற விவரங்களை கண்காணிக்க மத்திய சுகாதாரத் துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நோய் தொற்று என்பதும் நோய் என்பது வெவ்வேறு விஷயங்கள். உங்களுக்கு தொற்று ஏற்படலாம், ஆனால் அதனால் நோய் வரக் கூடும் என்று அர்த்தமல்ல.
கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அறிகுறியற்ற நபர்கள் அதிகமாக இருந்தால் மற்றும் புதிய வகை வைரஸ் மாறுபாடு, மனித உடலில் கடுமையான நோயை ஏற்படுத்தவில்லை என்றால், நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு இது ஒரேயடியாக ஏற்பட்ட கூர்மையான உயர்வு அல்ல, இரண்டு மாதங்களாக படிப்படியாக உயர்வைக் காண்கிறோம். குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தே பாதிப்பு வேறுபடுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.