நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணி சாத்தியம் இல்லைஜெய்ராம் ரமேஷ் திட்டவட்டம்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து நிற்க காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணி சாத்தியம் இல்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து நிற்க காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணி சாத்தியம் இல்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது தன்னிடம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து, அவர் கூறியதாவது:-
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணி அமைவது சாத்தியம் இல்லை. எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவானால், அதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும். ஆனாலும் இதையெல்லாம் பேசுவதற்கு காலம் வந்து விடவில்லை.
இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமை, வரவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலும், அதைத் தொடர்ந்து தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களின் சட்டசபை தேர்தலும்தான். நாங்கள் இதில் கவனம்செலுத்துவோம். நாடாளுமன்ற தேர்தல் பற்றி அப்புறம் பார்ப்போம்.
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் சந்திக்கின்றனர். மூன்றாது அணி, நான்காவது அணி அமைப்பது தொடரலாம். ஆனால் எதிர்க்கட்சியில் காங்கிரஸ் இருப்பது அவசியம்.
இப்போது அரசியல் கட்சி தலைவர்களுடன் சந்திப்பு தொடரும், எந்த எதிர்க்கட்சி அணியைப் பொறுத்தமட்டிலும் அதற்கு வலுவான காங்கிரஸ் தேவை. நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில், கட்சி தலைவர் கார்கேயும், மூத்த தலைவர்களும் என்ன யுக்திகள் வேண்டுமோ அதை வகுப்பார்கள். கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் திரிணாமுல் காங்கிரஸ் இடம் பெறவில்லையே என கேட்கிறீர்கள். நான் அவ்வாறு கருதவில்லை. அதற்கென்று கொள்கைகள் இருக்கும். அதற்கு மேல் நான் இதில் சொல்ல விரும்பவில்லை. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்பதில் 16 கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன.
அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு எழுதிய கடிதத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி கையெழுத்து போடவில்லை. ஆனால் அவர்கள் ஆதரவு தரத்தான் செய்கிறார்கள். அதானி நிறுவன விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி 93 கேள்விகள் எழுப்பி உள்ளன. 100 என்ற எண்ணிக்கையை அடைவோம். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை முற்றிலும் அவசியம். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணை மாற்று இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.