செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு


செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 5 Jan 2024 11:55 AM IST (Updated: 5 Jan 2024 1:32 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சரை பதவிநீக்கம் செய்ய கவர்னருக்கு அதிகாரமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, செந்தில்பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறைகள் வேறு அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டன. அதேவேளை, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுவார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ஆனால், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். முதல்-அமைச்சரின் ஒப்புதல் இன்றி கவர்னர் பிறப்பித்த உத்தரவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி தனது உத்தரவை நிறுத்தி வைத்தார்.

இதனிடையே, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக்கோரி வக்கீல் எஸ்.ராமச்சந்திரன், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என கூறியதுடன், செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து முதல்-அமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வக்கீல் எம்.எல்.ரவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர தடையில்லை. ஒரு அமைச்சரை பதவி நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என அதிரடி உத்தரவை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.


Next Story