வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க நடவடிக்கை - அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு
வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கை தொடர்பாக அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது.
புதுடெல்லி,
வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது. இதன் மூலம் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்வது தடுக்கப்படும்.
இதைத்தவிர 18 வயது நிரம்பியவுடனேயே வாக்காளராக பதிவு செய்யும் வகையில் ஆண்டுக்கு 4 கட்-ஆப் தேதிகள் (ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1) வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பேணும்வகையில், 'மனைவி' என்ற வார்த்தையை 'வாழ்க்கைத்துணை' என்று குறிப்பிட்டு திருத்தப்படுகிறது. இதன் மூலம் தொலைதூர பகுதிகள் அல்லது வெளிநாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர்-வீராங்கனைகளின் வாழ்க்கைத்துணை ஓட்டளிக்க வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தம் அமலில் வந்துள்ளது. இது தொடர்பாக 4 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளதாக சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.