ஆந்திராவில் என்டிஆர் பல்கலைக்கழகத்தை ஒய்எஸ்ஆர் சுகாதாரப் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்ற கவர்னர் ஒப்புதல்


ஆந்திராவில் என்டிஆர் பல்கலைக்கழகத்தை ஒய்எஸ்ஆர் சுகாதாரப் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்ற கவர்னர் ஒப்புதல்
x

விஜயவாடாவில் உள்ள என்டிஆர் பல்கலைக்கழகம் ஒய்எஸ்ஆர் சுகாதாரப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விஜயவாடா,

ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள என்டிஆர் சுகாதாரப் பல்கலைக்கழகம் ஒய்எஸ்ஆர் சுகாதாரப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் என்டிஆர் சுகாதாரப் பல்கலைக்கழகம் பெயரை ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி பல்கலைக்கழகம் என்று மாற்றுவதற்கான மசோதாவை செப்டம்பர் மாதம், சட்டமன்றத்தில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. என்டிஆர் ஆரோக்கிய வைத்திய பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர் ஒய்எஸ்ஆர் சுகாதார பல்கலைக்கழகம் என்று மாற்றிய மசோதா சட்டசபை மற்றும் சட்டப் பேரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

என்டிஆர் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றம், ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் பலத்த விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், முன்னாள் முதல்-மந்திரி என்டிஆரை ஒரு சிறந்த மனிதராக நாங்கள் நம்புகிறோம். எனவே, புதிதாக அமைக்கப்பட்ட விஜயவாடா மாவட்டத்திற்கு என்டிஆர் பெயரை சூட்டினோம். என்டிஆரை அவமதிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.

இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினார். பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்திற்கு கவர்னர் ஹரிசந்தன் பிஸ்வபூஷண் ஒப்புதல் அளித்ததையடுத்து, அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில் என்டிஆர் ஹெல்த் யுனிவர்சிட்டி ஆப் ஹெல்த் சயின்சஸ் என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக டாக்டர் ஒய்எஸ்ஆர் ஹெல்த் யுனிவர்சிட்டி என மாறியுள்ளது. இதற்கான அரசாணையை திங்கள்கிழமை மாலை அரசு வெளியிட்டது.

ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேச மாநிலத்தில், முதல் மருத்துவப் பல்கலைக்கழகத்தை அப்போதைய முதல்-மந்திரி என்டிஆர் 1986இல் நிறுவினார். என்டிஆர் இறந்த பிறகு, அந்த பல்கலைக்கழகம் அவரது நினைவாக 1998இல் என்டிஆர் சுகாதார பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story