கூட்டு பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க பள்ளி மேற்கூரையில் இருந்து குதித்த சிறுமி
கூட்டு பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க பள்ளி மேற்கூரையில் இருந்து குதித்து சிறுமி தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் கியான்கஞ்ச்ஹர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியும் அவரது சகோதரனும் ஜஜ்பூரில் உள்ள தங்கள் அக்கா வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பஸ்சில் சென்றுள்ளனர்.
சிறுமியும், அவரது சகோதரனும் ஜஜ்பூரில் உள்ள சுகுந்தா ஷார்மிட் பகுதியில் இரவு பஸ்சை விட்டு கீழே இறங்கியபோது கடுமையான மழை பெய்துள்ளது.
அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் மழை அதிகமாக பெய்வதால் சிறுமியையும், அவரது சகோதரனையும் அருகில் உள்ள பள்ளிக்கூட்டத்தில் ஒதுங்கி நின்றுவிட்டு மழை விட்டபின் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
அந்த கும்பலின் பேச்சை கேட்ட சிறுமியும் அவரது சகோதரனும் அருகே உள்ள பள்ளிக்கூடத்திற்குள் ஒதுங்கியுள்ளனர். அப்போது, இருவரையும் பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் சிறுமியின் சகோதரனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர், அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அந்த கும்பலிடமிருந்து தப்பிக்க பள்ளியில் மேற்கூரைக்கு ஓடியுள்ளார். அங்கும் அந்த கும்பல் விரட்டி வந்ததால் சிறுமி பள்ளியில் மேற்கூரையில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், சிறுமிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சிறுமியின் சகோதரன் கூச்சலிட்டு உதவிக்கு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளான். இதையடுத்து, அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் கூட்டு பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க பள்ளியின் மேற்கூரையில் இருந்து கீழே குதித்து தப்பியதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியின் சகோதரனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்த அந்த கும்பல் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.