கலெக்டர்கள், அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ய மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு


கலெக்டர்கள், அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ய மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கலெக்டர்கள் உள்பட அரசு அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கலெக்டர்கள் உள்பட அரசு அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் உத்தரவு

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் போன்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய தேர்தல் கமிஷனர் பெங்களூரு வந்து, சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு சென்றார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் மாவட்ட கலெக்டர்களை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அதிகாரிகள் பணி இடமாற்றம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள், போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், அதற்கு மேற்பட்ட பதவிகளில் பணியாற்றுகிறவர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றுவதாக இருந்தால் அல்லது சொந்த மாவட்டங்களில் பணியாற்றினால் அத்தகைய அதிகாரிகளை வேறு இடங்களுக்கு பணி இடமாற்றம் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவு தேர்தல் பணிகளில் நேரடியாக தொடர்பு உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும். அதே நேரத்தில் தேர்தல் பணிகளுக்கு தொடா்பு இல்லாத அதிகாரிகளுக்கு இது பொருந்தாது. பள்ளி-கல்லூரி ஆசிரியர்களுக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அரசியல் கட்சிகள் புகார் அளித்தால், அதில் முகாந்திரம் இருந்தால் அத்தகைய அதிகாரிகளை உடனே பணி இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் அந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story