பா.ஜனதாவின் பொய் அரசியலை ஒக்கலிகர்கள் சரியான முறையில் எதிர்கொள்வார்கள்; குமாரசாமி அறிக்கை
பா.ஜனதாவின் பொய்யான அரசியலை ஒக்கலிகர்கள் சரியான முறையில் எதிர்கொள்வார்கள் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கற்பனை கதாபாத்திரங்கள்
கற்பனை கலந்த கதாபாத்திரங்களை உருவாக்கி மத விரோத விதைகளை வினியோகித்து மக்களிடம் விஷ விதைகளை விதைத்து கட்சியை வளர்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. திப்பு சுல்தானை கொன்றது உரிகவுடா, நஞ்சேகவுடா என்று கற்பனை கதாபாத்திரங்களின் பெயர்களை உருவாக்கி அதை மண்டியாவில் நுழைவு வாயிலுக்கு வைத்தது ஏன்?. அந்த நுழைவு வாயிலில் மறைந்த மடாதிபதி பாலகங்காதரநாத சுவாமியின் பெயர் இருந்ததை மறைத்துள்ளனர்.
அந்த கற்பனை கதாபாத்திரங்களின் பெயர்களை அதில் போட்டது ஏன்?. இத்தகைய சில்லரை விஷயங்கள் மூலம் ஒக்கலிகரின் மனதை வெல்ல முடியும் என்று நினைத்தால் அது முட்டாள்தனமானது. பாலகங்காதரநாத சுவாமியின் பெயரை மறைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மண்டியா மாவட்ட நிர்வாகம் அந்த நுழைவு வாயில் பெயரை நீக்கியுள்ளது. இது பா.ஜனதாவின் தரம் தாழ்ந்த அரசியலை வெளிப்படுத்துவதாக உள்ளது. பொய்களுக்கு ஆயுள் மிகவும் குறைவு.
வெட்கப்பட வேண்டும்
இறைச்சி தின்று கோவிலுக்கு சென்ற சி.டி.ரவி, உரிகவுடா, நஞ்சேகவுடா பெயரில் நிரந்தரமாக நுழைவு வாயில் வைப்பதாக கூறியுள்ளார். அவர் வெட்கப்பட வேண்டும். சாக்கடை அரசியல் செய்து கொண்டிருக்கும் சி.டி.ரவி, பிரதமர் மோடிக்கு அடிமையாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் ஒக்கலிகர்கள் சுயமரியாதைக்கு பெயர் பெற்றவர்கள்.
ஒட்டுமொத்த ஒக்கலிக சமூகத்தை நகைப்புக்கு ஆளாக்கும் பா.ஜனதா என்ன சாதிக்கப்போகிறது என்பது தெளிவாக உள்ளது. இந்த முயற்சிக்கும் பிரதமர் மோயை பயன்படுத்தினால் அதற்கு அதிக விளம்பரம் கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே இந்த உரிகவுடா, நஞ்சேகவுடா விஷயத்தை கொண்டு வருகிறார்கள்.
கொலை செய்பவர்கள்
இந்த சதி அரசியலை மேற்கொள்ள பிரதமர் மோடியே ஊக்கம் அளித்தாரா?. ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் அடிப்படையில் விரோதத்தை பரப்ப ஒக்கலிகர்கள் கொலை செய்பவர்கள் என்று பிம்பித்து அவமானம் செய்துள்ளனர். பொறுமை, சுயமரியாதை, சேவை, நல்லிணக்கம் கொள்கைகளை பின்பற்றி வளர்ந்தது அந்த சமூகத்தின் பெருமையான விஷயம்.
விரோதம், பச்சை பொய்களை கூறி வளர்ந்தவர்கள் அல்ல ஒக்கலிகர்கள். இத்தகைய சில்லரை அரசியல் பா.ஜனதாவுக்கு எந்த பலத்தையும் வழங்காது. ஒக்கலிகர் சமூகம் விழிப்புணர்வுடன் உள்ளது. பா.ஜனதாவின் பொய்யான அரசியலை ஒக்கலிகர் சமூகம் சரியான முறையில் எதிர்கொள்ளும். தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.