காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில்இடர்பாடு சூத்திரத்தை பின்பற்ற வேண்டும்-அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு


காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில்இடர்பாடு சூத்திரத்தை பின்பற்ற வேண்டும்-அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் இடர்பாடு சூத்திரத்தை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பெங்களூரு:-

காவிரி நீர் பிரச்சினை

கர்நாடக மாநிலம் குடகில் உற்பத்தியாகும் காவிரி நீர் கர்நாடகம், தமிழக மக்களின் உயிர்நாடியாக உள்ளது. இந்த காவிரி நீரை பங்கீடுவது தொடர்பாக தமிழகம்-கர்நாடகம் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீர் ஒதுக்கீடு செய்தது. சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து தமிழகத்திற்கான நீர் ஒதுக்கீட்டை 177.25 டி.எம்.சி.யாக குறைத்தது. கடந்த சில ஆண்டுகளாக மழை நன்றாக பெய்து அணைகள் நிரம்பியதால், தமிழகத்திற்கு கூடுதல் உபரிநீர் திறக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை நிரம்பாததால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியவில்லை.

இதனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் காவிரியில் தண்ணீர் திறக்க கோரி மனு தாக்கல் செய்தது. இதையடுத்து காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் 23-ந்தேதி (அதாவது நேற்று) நடக்கும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவித்து இருந்தார்.

அனைத்துக்கட்சி கூட்டம்

அதன்படி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல், விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி, முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, குமாரசாமி, வீரப்ப மொய்லி, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா மற்றும் எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது பற்றி தற்போது உள்ள நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் போதிய மழை பெய்யாததால் இடர்பாடு சூத்திரத்தை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. மேகதாது திட்டம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் ஆதரவு

இதையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரி நீர் பிரச்சினை, மேகதாது திட்டம், மகதாயி பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. கர்நாடகத்தில் தற்போது போதிய மழை பெய்யாதது குறித்தும், தற்போது உள்ள உண்மை நிலை பற்றியும் டி.கே.சிவக்குமார் விவரித்தார்.

காவிரியில் தண்ணீர் திறக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் கர்நாடகம் தரப்பில் எந்த மாதிரியான கருத்துகளை எடுத்து வைக்கலாம் என்பது குறித்து சட்ட நிபுணர்கள் ஆலோசனை கூறினர். மேலும் இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர்கள் கர்நாடக அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி உள்ளனர்.

24 டி.எம்.சி. தண்ணீர் திறப்பு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி நடப்பாண்டில் இந்த மாதம் (ஆகஸ்டு) வரை 86.38 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு திறந்திருக்க வேண்டும். அதாவது, கடந்த ஜூன் மாதம் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் 2.08 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டது. ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி. நீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் 8.74 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பு மாதத்தில் (ஆகஸ்டு) 45.95 டி.எம்.சி. தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் 12.47 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் இதுவரை 24 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. மழை குறைவு, காவிரி படுகையில் மழை இல்லாததால் போதிய அளவு தண்ணீர் திறக்க முடியவில்லை.

5-6 ஆண்டுகளுக்கு ஒருமுறை மழை பற்றாக்குறை ஏற்பட்டு இத்தகைய இடர்பாடான நிலை உருவாகிறது. அதுபோல் இந்த ஆண்டு இடர்பாடு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை

இதுபற்றி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கா்நாடகம் சார்பில் எடுத்து கூறினோம். அவர்கள், வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கும்படி உத்தரவிட்டனர். அந்த அளவுக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகம் தரப்பில் எடுத்து கூறப்பட்டது. இதையடுத்து நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைத்து உத்தரவிட்டனர். அதனையும் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுள்ளோம்.

மேட்டூர் அணையில் 63 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. அவர்களுக்கு (தமிழகம்) குறுவை சாகுபடிக்கு 32 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே போதுமானது. ஆனால் அவர்கள் அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்து 60 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீரை பயன்படுத்தி உள்ளனர். ேமட்டூர் அணையில் இன்னும் தண்ணீர் உள்ளது. ஆனாலும் நீர் திறக்க வேண்டும் என்று நம்மிடம் கேட்கிறார்கள்.

இடர்பாடு சூத்திரம்

கர்நாடக விவசாயிகளின் நலன் காக்க வேண்டும். இதனால், இடர்பாடு சூத்திரத்தை பின்பற்ற வேண்டும். இந்த சூத்திரம் இதுவரை வகுக்கப்படவில்லை. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் எடுத்து கூறுவோம். மேகதாதுவில் புதிய அணை கட்டினால் இதுபோன்ற இடர்பாடான சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. நாங்கள் மேகதாது திட்டத்திற்கு திட்ட அறிக்கை தயாரித்து அனுமதிக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 25-ந்தேதி (நாளை) காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் மனு விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின்போது கர்நாடகம் தரப்பில் ஆஜராகும் வக்கீல்கள் திறமையான முறையில் வாதத்தை எடுத்து வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்துக்கட்சி குழுவை டெல்லி அழைத்து செல்வது குறித்து ஆலோசித்தோம். அதுகுறித்து வரும் நாட்களில் முடிவு செய்து டெல்லிக்கு செல்வோம். அப்போது மேகதாது திட்டத்துக்கு அனுமதி கொடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்துவோம்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story