மகளின் திருமண நிச்சயதார்த்தத்தில் மாட்டுக்கறி பிரியாணி விருந்து; விவசாயி உள்பட 2 பேர் கைது
மகளின் திருமண நிச்சயதார்த்தத்தில் மாட்டுக்கறி பிரியாணி விருந்து அளித்த விவசாயி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா ஈச்சகெரே பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன். விவசாயியான இவர் பசுமாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ரோஷன் தனது மகளின் திருமண நிச்சயதார்த்தத்தை தனது வீட்டில் வைத்து நடத்தினர். இதில் அசைவ உணவு பரிமாறப்பட்டது.
மேலும் மாட்டுக்கறி பிரியாணியும் பரிமாறப்பட்டது. இதற்காக அவர் தான் வளா்த்து வந்த மாட்டையே வெட்டி பிரியாணி போட்டார். இதுபற்றி என்.ஆர்.புரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ரோஷன், தான் வளா்த்து வந்த பசுமாட்டை வெட்டி பிரியாணி சமைத்து போட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் ரோஷன் மற்றும் அவரது உறவினர் தீக்சித் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் பசுமாட்டை வெட்ட பயன்படுத்திய ஆயுதங்கள், அவற்றின் கால்கள், மாட்டின் தலை ஆகியவற்றையும் மீட்டனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் தலைமறைவாக உள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிஓடிய 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.