வெறுப்பு பேச்சு வழக்கு: மத்திய, மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
டெல்லி,
நாட்டில் சமீப நாட்களாக வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகள் அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சியினர், மத தலைவர்கள் என பல தரப்பினர் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த வெறுப்புணர்வு பேச்சு மக்களிடையே மோதலை ஏற்படுத்தவும் வழிவகுக்கிறது.
இதனிடையே, வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வெறுப்பு பேச்சு மிகப்பெரிய குற்றம் என கூறிய சுப்ரீம் கோர்ட்டு, வெறுப்பு பேச்சு நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பாதிக்கும் திறன் கொண்டது என்று கூறியது.
மேலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்றாலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பின்னர், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மே12-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது.