கர்நாடக பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா?; காங்கிரசுக்கு, நளின்குமார் கட்டீல் கேள்வி
கர்நாடக பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா என்று காங்கிரசுக்கு, நளின்குமார் கட்டீல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மங்களூரு;
நளின்குமார் கட்டீல் பேட்டி
கர்நாடக பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைக்கிறது. இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சியில் திட்டப்பணிகளுக்கான தொகையை பெற 50 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதனால் பா.ஜனதாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல், மங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆதாரம் உள்ளதா?
கர்நாடக பா.ஜனதா அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா ஆகியோர் கமிஷன் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். 40 சதவீதம் கமிஷன் விவகாரத்தில் என்ன ஆதாரம் உள்ளது. அந்த ஆதாரம் இருந்தால் காங்கிரசார் கொடுக்க வேண்டும்.
காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜெயமாலா, கோழி முட்டையில் ஊழலில் ஈடுபட்ட ஆதாரம் எங்களிடம் உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வசூலித்த பணத்தில் 80 சதவீதத்தை கொள்ளையடித்தது. இதை அவர்களால் மறுக்க முடியுமா. தார்மீகம் இருந்தால் இதற்கு பதில் கூறவேண்டும்.
அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணாவும் கமிஷன் தொடர்பான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். முன்னாள் மந்திரி ஈசுவரப்பாவுக்கு மிரட்டல் கடிதம் வந்தது பற்றி அறிந்தேன்.
இதுபற்றிய புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈஸ்வரப்பாவுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கும். ஈத்கா மைதானம் என்பது பொது இடம். அங்கு விநாயகர் சிலை வைக்கக்கூடாது என்று யாரும் சொல்லமுடியாது. அரசு இடத்தில் பொதுகாரியங்களுக்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.