கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி: பிரதமர் மோடி பேச்சு
கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்குவதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கொச்சின்,
கேரளாவின் கொச்சி நகருக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி இன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசும்போது, நாட்டிலுள்ள ஒவ்வோர் ஏழைக்கும் வீடு வழங்குவதற்கான பிரசாரத்தில் நம்முடைய அரசு ஈடுபட்டு வருகிறது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி, கேரள ஏழைகளுக்கு 2 லட்சம் வீடுகள் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் 1.3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன.
அமுதத்திற்கான சுதந்திரம் என்ற அடிப்படையில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான தீர்மானத்தின்படி பணி நடந்து வருகிறது. இதில், கேரள மக்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். தீர்மானங்களை பா.ஜ.க. செய்து முடிக்கிறது என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவ கல்லூரியையாவது தொடங்குவதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
அது கேரள இளைஞர்களுக்கு பெரிதும் உதவும். கேரளாவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பா.ஜ.க. அரசு பல்வேறு திட்ட பணிகளுக்காக ரூ.1 லட்சம் கோடி செலவிட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும், எங்கெல்லாம் பா.ஜ.க. அரசாளுகிறதோ, அங்கெல்லாம் வளர்ச்சி திட்ட பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. ஏனெனில் மத்தியில் மற்றும் மாநிலத்தில் என இரட்டை என்ஜினுடன் அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த இரட்டை என்ஜின் கொண்ட அரசானது, கேரளாவை வளர்ச்சிக்கான புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல உதவும் என அவர் கூறியுள்ளார்.