காஷ்மீர்: பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - போலீஸ் பலி, 7 வயது மகள் படுகாயம்
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் உயிரிழந்தார். அவரின் மகள் படுகாயமடைந்தார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் சௌரா பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் ஷபிபுல்லா குரேஷி. அவர் இன்று மாலை தனது வீட்டு வாசல் அருகே தனது 7 வயதான மகளை தூக்கிவைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் ஷபிபுல்லா மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஷிபிபுல்லா மீதும் அவரது 7 வயது மகள் மீதும் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்தது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஷபிபுல்லா மற்றும் அவரது மகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே போலீஸ்காரர் ஷபிபுல்லா உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷபிபுல்லாவின் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் போலீஸ்காரர் மற்றும் அவரின் மகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.