காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை நினைத்து பார்க்க வேண்டும்


காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை நினைத்து பார்க்க வேண்டும்
x

கா்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை காங்கிரஸ் தலைவர்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:-

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சட்ட பூர்வமாக அணுகலாம்

எங்கள் ஆட்சியில் அதிக ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் சொல்கிறார்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை அவர்கள் சற்று நினைத்து பார்க்க வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பா.ஜனதா அரசின் ஊழல்கள் குறித்து விசாரிப்போம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதற்கு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொள்ளையடிப்போம் என்று அர்த்தம்.

தங்களின் திட்டத்தை தாங்களே கூறி கொண்டுள்ளனர். எங்கள் அரசு மீதான 40 சதவீத கமிஷன் புகாருக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. இந்த புகார் குறித்து சட்ட பூர்வமாக அவர்கள அணுகலாம். ஆனால் அவர்களிடம் ஆதாரங்கள் இல்லாததால் மவுனமாக உள்ளனர். அரசு மீது ஆதாரமின்றி புகார் கூறுவதால் எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை.

விசாரணை நடத்துவோம்

எங்கள் கட்சியை சேர்ந்த கூளிஹட்டி சேகர் எம்.எல்.ஏ. ஊழல் குறித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் குறிப்பிட்டு ஊழல் குறித்து தெரிவிக்கவில்லை. அவருக்கு நாங்கள் தகுந்த பதில் அளித்துள்ளோம். அதிகாரிகள் யாராவது தவறு செய்திருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்துவோம் என்று சட்டசபையில் நாங்கள் கூறியுள்ளோம். நாங்கள் டெண்டர்களை பரிசீலனை செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளோம்.

டெண்டர் விடும் பணிகள் முழுமையாக வௌிப்படையாக நடக்கின்றன. ஊழல்கள் குறித்து யார் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். டி.கே.சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தபோது, வெளிப்படைத்தன்மை விதிமுறைகளை தளர்த்தினார். இதன் மூலம் முறைகேடுகள் நடைபெற அவர் வழிவகுத்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த விதிமுறைகளை அமல்படுத்தி இருக்கிறோம். அதனால் ஊழல் ஒழிப்பு பற்றி பேச காங்கிரஸ் தலைவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story