மணிப்பூர் வன்முறை: பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...!
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
டெல்லி,
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ள நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, மணிப்பூரில் கலவரத்தின் போது 2 பெண்களை ஒரு தரப்பு ஆண்கள் நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கவும், விவாதம் நடத்தவும் உள்துறை மந்திரி தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் முதலில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் தொடங்கிய உடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் திரண்டு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்ற பெயரில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.