பண்டிகை நாட்களில் விடுமுறை கிடையாது என்ற உத்தரவு
பண்டிகை நாட்களில் விடுமுறை எடுக்க கூடாது என்ற உத்தரவு சாதாரண போலீசாருக்கு பொருந்தாது என்று துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு:
விடுமுறை எடுக்க கூடாது
பெங்களூரு தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக இருந்து வருபவர் சி.கே.பாபா. இவர், தனது மண்டலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார், பண்டிகை நாட்கள், ஊர்வலம், போராட்டம் உள்ளிட்டவை நடைபெறும் நேரத்தில் விடுமுறை எடுக்க கூடாது என்று உத்தரவிட்டு இருந்தார். இது தென்கிழக்கு மண்டலத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் கவனத்திற்கும் சென்றது. இதுபற்றி துணை கமிஷனரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சாதாரண போலீசாருக்கு பொருந்தாது
அரசு அதிகாரிகள் விடுமுறை எடுப்பதில் சில விதிமுறைகள் உள்ளது. போலீஸ் துறையிலும் அந்த விதிமுறைகள் இருக்கிறது. ஒரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், உதவி போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் விடுமுறை எடுக்க வேண்டும் என்றால், துணை போலீஸ் கமிஷனர் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால் உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மற்ற சாதாரண போலீசார் விடுமுறை எடுக்க இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனரிடம் அனுமதி பெற்றால் போதுமானது.
பண்டிகை நாட்கள், பெரிய ஊர்வலம், போராட்டம் நடைபெறும் போது போலீசார் பாதுகாப்பு அளிப்பது கட்டாயமாகும். இந்த சந்தர்பபத்தில் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர்கள் பணியாற்ற வேண்டும் என்று தான் உத்தரவிட்டுள்ளேன். சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது முக்கியம். நான் பிறப்பித்த உத்தரவு தென்கிழக்கு மண்டல போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சாதாரண போலீசாருக்கு பொருந்தாது.
அவசர காரணங்களில் விடுமுறை...
பண்டிகை நாட்களாக இருந்தாலும் உயர் போலீசார் கூட உடல் நலக்குறைவு உள்ளிட்ட அவசர காரணங்களில் விடுமுறை எடுக்கலாம். போலீசார் விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்ற முடியாது. சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டே தீர வேண்டும்.
அவர்கள் விடுமுறை மற்றொரு நாளில் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே நான் பிறப்பித்த உத்தரவை சாதாரண போலீசார் பெரிதுப்படுத்த வேண்டாம். அந்தந்த போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியான இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு மட்டுமே பொருந்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.