டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
கொரோனா பரவல் வேகம் எடுத்தாலும் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் இல்லை என்றும் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த 10 தினங்களில் மட்டும் 19,760- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 50 சதவீதம் அதிகரித்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
கடந்த 1 ஆம் தேதி தொற்று பரவல் விகிதம் 11.41 ஆக இருந்தது. 2 பேர் பலியாகி இருந்தனர். ஆனால், அடுத்த சில நாட்களில் தொற்று பரவல் இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 180 நாட்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பால் ஒரே நாளில் நேற்று 8 பேர் உயிரிழந்து இருந்தனர். பரவல் விகிதமும் 17.83 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 தினங்களில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பரவல் வேகம் எடுத்தாலும் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் இல்லை என்றும் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.