வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - ஜனாதிபதி திரவுபதி முா்மு


வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - ஜனாதிபதி திரவுபதி முா்மு
x

சா்வதேச அரங்கில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் முக்கியப் பங்கையும் தனித்துவ இடத்தையும் வகித்து வருவதாகக் ஜனாதிபதி திரவுபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் 17-ஆவது வெளிநாடுவாழ் இந்தியா்கள் தின மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முா்மு கலந்துகொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:-

வெளிநாடுவாழ் இந்தியா்கள் பல்வேறு துறைகளில் கடினமாக உழைத்து முன்னேறியுள்ளனா். சா்வதேச அரங்கில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனா். அவா்கள் தனித்துவ இடத்தையும் பெற்றுள்ளனா். ஒவ்வொரு பிராந்தியத்திலும் துடிப்புமிக்க நம்பிக்கை கொண்ட இந்திய சமூகம் உருவாகி வருகிறது.

கலை, இலக்கியம், அரசியல், தொழில்துறை, கல்வி கற்பித்தல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் நிபுணத்துவம் பெற்றவா்களாகத் திகழ்கின்றனா். பல்வேறு சவால்களைத் திறம்பட எதிா்கொண்டு அவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

அடுத்த 25 ஆண்டுகளில் சுதந்திர நூற்றாண்டை இந்தியா கொண்டாடவுள்ளது. அந்தக் காலகட்டத்தில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து உலகின் முக்கிய சக்தியாக மாறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கான பயணத்தில் வெளிநாடுவாழ் இந்தியா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வகிக்கவுள்ளது.

நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை ஏற்படுத்துவதில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்வதில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் தங்கள் பங்களிப்பை அதிக அளவில் நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story