சுயமரியாதை வாழ்க்கை வாழ சொந்த வீடு அவசியம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


சுயமரியாதை வாழ்க்கை வாழ சொந்த வீடு அவசியம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

சுயமரியாதை வாழ்க்கை வாழ ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு அவசியம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

நில உரிமை பத்திரம்

பெங்களூருவில் பயனாளிகளுக்கு நில உரிமை பத்திரம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, அந்த பத்திரத்தை வழங்கி பேசியதாவது:-

கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் இதுவரை ஒரு லட்சத்து 54 ஆயிரம் நில உரிமை பத்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் லம்பாணி, தாண்டா, குருபர ஹட்டி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 1½ லட்சம் நில உரிமை பத்திரம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகமொத்தம் 3 லட்சம் பேருக்கு நில உரிமை பத்திரத்தை பயனாளிகளுக்கு வழங்கியுள்ளோம்.

காபி விவசாயிகள்

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காபி தோட்ட விவசாயிகளுக்கு அரசு நிலத்தை குத்தகைக்கு வழங்கியுள்ளோம். ஒரு லட்சம் ஏக்கர் வன நிலம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் தகுதியான ஏழை மக்களுக்கு நில உரிமை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. சுயமரியாதை வாழ்க்கை வாழ ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு அவசியம்.

வீடு வேண்டுமெனில் வீட்டுமனை நிலம் தேவை. அரசு நிலத்தில் வீடு கட்டியவர்களுக்கு நாங்கள் இந்த நில உரிமை பத்திரத்தை வழங்கியுள்ளோம். இதற்காக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்தோம். இதற்கு முன்பு ஆட்சி செய்த கட்சிகள் இத்தகைய முடிவை எடுக்கவில்லை. ஏழைகளின் மீது அக்கறை இருந்தால் எல்லா சட்ட சிக்கல்களையும் தீர்க்க முடியும்.

ஏழையாக சாகக்கூடாது

இது உங்களின் உரிமை. அதற்கு இன்று சட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் எப்போதும் நினைத்து பார்க்க வேண்டும். நாங்கள் ஏழை மக்களுக்கு ஆதரவாக ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறோம் என்பதற்கு இதுவே சாட்சி. ஏழையாக பிறப்பு என்பது இயல்பாக நடப்பது. ஆனால் சாகும்போது ஏழையாக சாகக்கூடாது. சாதனை படைக்க வேண்டும். உழைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

மக்கள் முன்னேறினால் கா்நாடகமும் முன்னேறும். கிராம ஒன் திட்டத்தில் 1½ கோடி பேரின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளது. குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் படித்து முன்னேற வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "உரிகவுடா, நஞ்சேகவுடா விவகாரத்தில் மடாதிபதி நிா்மலானந்தநாத சுவாமி கூறியதை அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்றார்.


Next Story