காங்கிரஸில் ராகுல் காந்திக்கு எப்போதும் முதன்மையான இடம் உண்டு- ப.சிதம்பரம்
காங்கிரஸில் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ராகுலுக்கு முதன்மையான இடம் உண்டு என ப.சிதம்பரம் கூறினார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக மூத்த தலைவர் ப.சிதம்பரம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் காங்கிரஸில் அவருக்கு எப்போதும் ஒரு "முதன்மையான இடம்" இருக்கும். ராகுல் காந்தி இதுவரை கட்சித் தலைவர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளலாம்.
எந்தவொரு அரசியல் கட்சியும் வாக்காளர் பட்டியலை வெளியிட மாட்டார்கள். காங்கிரஸில் வாக்களிக்கும் நபர்களின் பட்டியலைப் போட்டியிட விரும்புவோர் மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.