காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபர் சுட்டுக்கொலை - ரூ.28 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
மர்மநபர் கடத்தி வந்த போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.28 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பா,
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டம் சர்வதேச எல்லை அருகே, ராம்கார் செக்டாரில் நேற்று முன்தினம் இரவு யாரோ எல்லையை தாண்டி ஊடுருவ முயற்சிப்பதை பாதுகாப்பு படையினர் கண்டனர். ராணுவ வீரர்கள் அவரை எச்சரித்தபோது அவர் மறைவிடத்தில் பதுங்கினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
இதையடுத்து ராணுவவீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் உயிரிழந்த நபர் போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 4 பாக்கெட்டுகளில் 4.340 கிலோ கிராம் விலை உயர்ந்த ஹெராயின் போதைப் பொருளும், ரூ.330 பாகிஸ்தான் பணமும் கைப்பற்றப்பட்டது.
'மர்மநபர் கடத்தி வந்த போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.28 கோடி இருக்கும்' என்றும், 'உயிரிழந்த பாகிஸ்தான் நபரின் அடையாள விவரம் உடனடியாக தெரியவரவில்லை' என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.