சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நாடாளுமன்றக்குழு பரிந்துரை


சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நாடாளுமன்றக்குழு பரிந்துரை
x
தினத்தந்தி 8 Aug 2023 3:15 AM IST (Updated: 8 Aug 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா எம்.பி. சுஷில் குமார் மோடி தலைமையிலான இந்த குழுவின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளின் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழு

இந்தியாவில் தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆகும். அதேநேரம் ஐகோர்ட்டு நீதிபதிகள் 62 வயதில் ஓய்வு பெறுகின்றனர்.

நீதிபதிகளின் இந்த ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளது.

இது தொடர்பாக சட்டம் மற்றும் பணியாளர் நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 'நீதித்துறை நடைமுறைகளும், அதன் சீர்திருத்தங்களும்' என்ற பெயரில் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து இருக்கிறது.

பா.ஜனதா எம்.பி. சுஷில் குமார் மோடி தலைமையிலான இந்த குழுவின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அரசியல் சாசன திருத்தம்

மருத்துவ அறிவியலின் முன்னேற்றம், மக்களின் ஆயுட்காலம் அதிகரிப்புக்கு ஏற்ப நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக இந்த கமிட்டி கருது கிறது.

இதற்காக அரசியல் சாசனத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொண்டு அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.

செயல்பாடுகள் ஆய்வு

இவ்வாறு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும்போது, அவர்களின் உடல் நிலை, வழங்கிய தீர்ப்புகளின் எண்ணிக்கை, அவற்றின் தரம் போன்றவற்றின் அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

அந்தவகையில் எந்தவொரு நீதிபதியின் பதவிக்காலத்தை உயர்த்துவதற்கு பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பு, சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்தால் ஒரு மதிப்பீட்டு முறையை வகுத்து நடைமுறைப்படுத்தலாம்.

ஓய்வுக்குப்பின் பணி

இதைப்போல நீதிபதிகளின் ஓய்வுக்குப்பின் அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் அதிருப்தி வெளியாகி இருக்கிறது.

எனவே அரசின் பணத்தில் இருந்து நிதியுதவி செய்யப்படும் எந்த வகையிலான அமைப்புகள் அல்லது நிறுவனங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை பணியமர்த்தும்போது, அவர்களின் பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

வயது தெரிவிக்கவில்லை

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க பரிந்துரைத்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, அதற்கான வயது வரம்பு எதையும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு இணையாக உயர்த்துவதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-வது ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனாலும் பின்னர் அது விவாதத்துக்கு எடுக்கப்படாமல் முடங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story