அமளிக்கிடையே மசோதா நிறைவேற்றம் - நாடாளுமன்றம் 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


அமளிக்கிடையே மசோதா நிறைவேற்றம் - நாடாளுமன்றம் 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்ரல் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. அமளிக்கிடையே, போட்டி திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியவுடன், கருப்பு சட்டை அணிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடங்கினர். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கூச்சலிட்டனர். பதாகைகளையும் கையில் பிடித்திருந்தனர். அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த பார்த்ருஹரி மதாப், சபையை பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார்.

12 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, அதானி விவகாரத்தை எழுப்பி, சபையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். சில அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ், வன பாதுகாப்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர், சபாநாயகர் இருக்கையில் இருந்த ரமா தேவி அனுமதியுடன், அந்த மசோதாவை இரு அவைகளின் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்புவதாக கூறினார்.

பின்னர், 7 மாதங்களுக்கு முன்பு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போட்டி (திருத்தம்) மசோதாவை சபையின் பரிசீலனைக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முன்வைத்தார். அமளிக்கிடையே, விவாதம் ஏதுமின்றி மசோதா நிறைவேறியது. விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அவற்றின் சந்தை விற்றுமுதல் அடிப்படையில் அபராதம் விதிப்பதற்கு பதிலாக, உலக விற்றுமுதல் அடிப்படையில் அபராதம் விதிக்க இம்மசோதா வகை செய்கிறது.

ராமநவமியை முன்னிட்டு, இன்றும், நாளையும் விடுமுறை விட சபை உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்தனர். எனவே, சபையை ஏப்ரல் 3-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைப்பதாக ரமாதேவி அறிவித்தார். மாநிலங்களவையில் சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அமர்ந்தவுடன், கருப்பு சட்டை அணிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடங்கினர். 'மோடி-அதானி பாய் பாய்' என்று கோஷமிட்டனர்.

சபை அலுவல்களை ஒத்திவைக்கக்கோரி, 8 நோட்டீஸ்கள் வந்திருப்பதாக ஜெகதீப் தன்கர் கூறினார். மேற்கொண்டு பேசவிடாமல் அமளி நீடித்ததால், சபையை பிற்பகல் 2 மணிவரை அவர் ஒத்திவைத்தார். 2 மணிக்கு சபை கூடியபோது, போட்டி திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய தகவலை கூறி, அதன் நகலை சபையில் தாக்கல் செய்யுமாறு ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

பின்னர், வன பாதுகாப்பு திருத்த மசோதா தொடர்பான கூட்டுக்குழுவில் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயரை மத்திய சுற்றுச்சூழல்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் வாசித்தார். பின்னர், சபை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story