விமானத்தில் பயணிக்கு கொடுக்கப்பட்ட உணவில் 'கல்' - மன்னிப்புகேட்ட ஏர் இந்தியா
ஏர் இந்தியா விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவில் ‘கல்’ இருந்ததாக பயணி புகார் அளித்துள்ளார்.
டெல்லி,
சமீபநாட்களாக விமான நிறுவனங்கள் தொடர்பாக மீது தொடர்ச்சியாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் 'கல்' இருந்ததாக பெண் பயணி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக கடந்த 8-ம் தேதி டுவிட்டரில் ஏர் இந்தியா நிறுவனத்தை டேக் செய்த அந்த பெண் பயணி டெல்லியில் இருந்து நேபாளத்தின் காத்மண்டு சென்ற விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கல் இருந்ததாக புகார் அளித்தார். மேலும் அந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஏர் இந்தியா நிறுவன செய்தித்தொடர்பாளர், ஏர் இந்தியா விமானம் 215-ல் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கல் இருந்ததாக எழுந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக கருதுகிறோம். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதுடன் பயணியிடம் மன்னிப்பு கோருகிறோம்' என்றார்.