பத்ரா சால் மோசடி வழக்கு: சஞ்சய் ராவத் நீதிமன்ற காவல் 21-ந் தேதி வரை நீட்டிப்பு
பத்ரா சால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் 21-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் மாதம் பத்ரா சால் மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். மும்பை ஆர்தா் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே அடங்கிய அமர்வு முன் நடந்தது. இதில் சஞ்சய் ராவத் சார்பில் ஆஜரான வக்கீல், சஞ்சய் ராவத் மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு நம்ப முடியாதது என்றார்.
அப்போது அமலாக்கத்துறை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், சஞ்சய் ராவத்தின் புதிய வாதங்களுக்கு எதிராக பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என கூறினார்.
இதையடுத்து நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்தி வைத்தார். மேலும் அவர் சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலையும் அன்று வரை நீட்டித்து உத்தரவிட்டார்.