ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணையில் காங்கிரஸ் போராட்டத்தால் மக்கள் அதிருப்தி- நளின்குமார் கட்டீல் எம்.பி.


ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணையில்  காங்கிரஸ் போராட்டத்தால் மக்கள் அதிருப்தி- நளின்குமார் கட்டீல் எம்.பி.
x

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் போராட்டம் நடத்துவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக நளின்குமார் கட்டீல் எம்.பி. தெரிவித்துள்ளார்.

கொள்ளேகால்: ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் போராட்டம் நடத்துவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக நளின்குமார் கட்டீல் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பொதுவானது

பா.ஜனதா மாநில தலைவரும், எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அமலாக்கத்துறை விசாரணை என்பது அனைவருக்கும் பொதுவானது. காங்கிரஸ் ஆட்சியில் கூட பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடம் அமலாகத்துறை விசாரணை நடத்தியது. அப்போது பா.ஜனதா எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை. ஆனால் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதால் நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு இந்த மண்ணின் மகிமை புரியவில்லை. அப்படி தெரிந்திருந்தால் போராட்டம், வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

கணிக்க முடியாது

இந்த விவகாரத்தில் காங்கிரசின் செயல்பாட்டால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் காங்கிரசை புறக்கணிக்க தொடங்கிவிட்டனர். இதனால் பா.ஜனதாவின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா எளிதாக வெற்றி பெறும். மேல்-சபை தேர்தல் முடிவை வைத்து காங்கிரஸ் பகல் கனவு காண்கிறது. மேல்-சபை தேர்தல் முடிவை வைத்து சட்டசபை தேர்தல் வெற்றியை கணிக்க முடியாது.

இந்த தேர்தலில் பா.ஜனதாவும் 2 இடங்களை பிடித்துள்ளது. பா.ஜனதாவிற்கு மக்கள் மத்தியில் அதிகளவு செல்வாக்கு உள்ளது. அதனால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா நிச்சயம் வெற்றி பெறும். சட்டசபை தேர்தலுக்கு முன்பு முதல்-மந்திரி மாற்றம் இருக்கும் என்பதில் உண்மையில்லை.

பசவராஜ் பொம்மை தலைமையில்...

பசவராஜ் பொம்மைதான் நிரந்தர முதல்வர். அவர் தலைமையில்தான் சட்டசபை தேர்தலை பா.ஜனதா சந்திக்கும்.

இதில் எந்தமாற்று கருத்தும் இல்லை. எனவே, மக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பா.ஜனதாவில் உட்கட்சி பூசல் இல்லை. அனைவரும் ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story