காங்கிரஸ் மீதான மக்கள் எதிர்பார்ப்பு வீணாகி விட்டது
மந்திரிசபை கூட்டத்தில் 5 இலவசங்களுக்கு வெறும் ஒப்புதல் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் மீதான மக்கள் எதிர்ப்பார்ப்பு வீணாகி விட்டதாக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
மக்கள் எதிர்ப்பார்ப்பு வீணாது
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தனர். நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்திற்கு பின்பு காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களில் பெண்கள் இன்றே (அதாவது நேற்று) இலவசமாக பயணிக்க தயாராக இருந்தனர்.
பெண்களின் எதிர்ப்பார்ப்பை சித்தராமையா வீணாக்கி விட்டார். காங்கிரசின் இலவச திட்டங்கள், வெறும் அறிவிப்பாகவே உள்ளது. இதனால் காங்கிரஸ் அளித்த 5 இலவச வாக்குறுதிகள் மீது கர்நாடக மக்களின் எதிர்ப்பார்ப்பு ஒட்டு மொத்தமாக வீணாகி இருக்கிறது.
காங்கிரசுக்கு மனசு இல்லை
அடுத்த மந்திரிசபை கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து 5 இலவச திட்டங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். இலவச திட்டங்களுக்கு ஏறக்குறைய ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதன் மூலம் நிதி பற்றாக்குறை ஏற்படும். காங்கிரஸ் தலைவர்கள் மனசு வைத்தால் நாளையே (அதாவது இன்று) பெண்களின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்க முடியும்.
ஏனெனில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய தகவல் அரசிடம் உள்ளது. பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்க காங்கிரசுக்கு மனசு இல்லை. இலவச மின்சாரம் வழங்குவதற்கும் பல்வேறு காரணங்களை சொல்லி வருகிறார்கள். இந்த இலவச திட்டங்கள் பற்றி சட்டசபையில் குரல் எழுப்பப்படும். அதுபோல், பா.ஜனதா ஆட்சியில் ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி இருப்பது குறித்தும் காங்கிரசுக்கு தக்க பதில் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.