தத்தா ஜெயந்தி விழா கொண்டாட அனுமதி
வருகிற 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் தத்தா ஜெயந்தி விழா கொண்டாட அனுமதி வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிக்கமகளூரு:-
தத்தா பீடம்
சிக்கமகளூரு சந்திர திரிகோண மலையில் பாபாபுடன்கிரி கோவில், தத்தா பீடம் அமைந்துள்ளது. இங்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் வழிபாடு ெசய்து வருகிறார்கள். தத்தா பீடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்துக்களும், முஸ்லிம்களும் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பாபாபுடன் கிரி கோவிலை மாநில அரசே நிர்வகிக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி மாநில அரசு, கோவிலை நிர்வகித்து வருகிறது. மேலும் 9 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டில் மனு
இந்த நிலையில், பாபாபுடன் கிரி மலையில் வருகிற 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தத்தா ஜெயந்தி விழா நடக்கிறது. இதையொட்டி ஏராளமான இந்து பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். மேலும் அர்ச்சகரை நியமித்து தத்தா பீடத்துக்கு பூஜை செய்யவும், தத்தா ஜெயந்தி விழாவுக்கு அனுமதி அளித்தும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தத்தா ஜெயந்திக்கு தடை விதிக்க கோரியும், தத்தா பீடத்துக்கு அர்ச்சகர் நியமிக்கப்பட்டதை கண்டித்தும் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அரசு தரப்பில் தத்தா ஜெயந்திக்கு அனுமதி அளிக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தத்தா ஜெயந்திக்கு அனுமதி
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் அலோக் ஆராதே, விஸ்வஜித் முன்னிலையில் நடந்தது. அப்போது நீதிபதிகள், பாபாபுடன் கிரி கோவிலில் வருகிற 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் தத்தா ஜெயந்தி விழாவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.