திருமண உறவில் பலாத்காரம் பற்றிய மனுக்கள்; பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


திருமண உறவில் பலாத்காரம் பற்றிய மனுக்கள்; பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

திருமணம் முடிந்த தம்பதியின் உறவில் பாலியல் பலாத்காரம் பற்றி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு கேட்டு கொண்டுள்ளது.



புதுடெல்லி,


இந்தியாவில் திருமணம் நடந்து முடிந்த கணவர் மற்றும் மனைவி இடையேயான தாம்பத்திய உறவு புனிதம் வாய்ந்தது என கூறப்படுகிறது. இந்நிலையில், மனைவியின் சம்மதம் இன்றி நடக்கும் பாலியல் உறவுகள் பலாத்காரம் வகையிலானது என்று கோரி பல்வேறு வழக்குகள் பதிவாகி வருகின்றன.

இதுபற்றி குஷ்பூ சைபி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாரணையில் நீதிபதிகள் ராஜீவ் சக்தேர் மற்றும் ஹரி சங்கர் ஆகியோர் கொண்ட அமர்வு கடந்த ஆண்டு மே 11-ந்தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

இதில், அமர்வை தலைமையேற்று நடத்திய நீதிபதி சக்தேர் கூறும்போது, திருமண உறவில் பலாத்கார விதிவிலக்கு என்ற பிரிவை கடுமையாக தாக்கும் வகையில் தனது தீர்ப்பில் பேசினார். அது அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டது.

ஐ.பி.சி. சட்டம் அமலுக்கு வந்து 162 ஆண்டுகள் ஆன பின்பும், திருமணம் முடிந்த ஒரு பெண்ணின் நீதிக்கான கோரிக்கை கவனிக்கப்படவில்லை என்பது சோகத்திற்குரியது என தெரிவித்து உள்ளார்.

எனினும், நீதிபதி சங்கர் கூறும்போது, சட்டப்பிரிவில் விதிவிலக்கு என்பது நியாயமற்ற ஒன்று அல்ல. அது மற்றொன்றில் இருந்து வேறுபட்டு எளிதில் புரிந்து கொள்ள கூடிய விசயம் என குறிப்பிட்டார்.

இதேபோன்று கர்நாடக ஐகோர்ட்டில் நடந்த வழக்கு ஒன்றில், மனைவியை கணவர் பலாத்காரம் செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் வழக்கு பதிவானது. இதற்கெதிரான கணவரின் மனு மீது விசாரணை நடந்தது.

அதில், கடந்த ஆண்டு மார்ச் 23-ந்தேதி நீதிபதி அளித்த தீர்ப்பில், பலாத்காரம் மற்றும் இயற்கைக்கு எதிரான பாலியல் உறவில் ஈடுபடும் கணவருக்கு விதிவிலக்கு அளிப்பது அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவுக்கு (சட்டத்தின் முன் அனைவரும் சமம்) எதிரானது என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதனால் திருமணம் ஆன கணவருக்கு வந்த சோதனையாக, சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் வந்து குவிந்து விட்டன. இதுபோன்ற பல மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தன.

இதன்படி, சட்ட பிரிவு 375-ன் கீழ் (பாலியல் பலாத்காரம்), திருமண உறவில் பலாத்கார விதிவிலக்கு, என்ற அரசியலமைப்புக்கு எதிராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை, கணவரால் பாலியல் பலாத்காரம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளான திருமணம் ஆன பெண்கள் தாக்கல் செய்திருந்தனர்.

ஐ.பி.சி.யின் பிரிவு 375-ன் கீழ் அளிக்கப்பட்ட விதிவிலக்கின்படி, மனைவி மைனராக இல்லாதபோது, கணவரால் மேற்கொள்ளப்படும் பாலியல் உறவு அல்லது பாலியல் செயல்கள் என்பது பாலியல் பலாத்காரம் கிடையாது என கூறப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் நரசிம்மா மற்றும் பர்திவாலா ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.

அவர்கள் வழக்குகளை பற்றி ஆராய்ந்து, பின்னர் இதற்கு முறையான பதில் மனுக்களை வருகிற பிப்ரவரி 15-ந்தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளனர். இதன்பின்பு, மனுக்கள் மீது இறுதி விசாரணை வருகிற மார்ச் 21-ந்தேதி நடைபெறும் என கூறி வழக்கை ஒத்தி வைத்து உள்ளனர்.


Next Story